தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் ரூ.15,000 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் திமுக, அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட 27 மாநில கட்சிகளின் வருமான வரி தாக்கல் விவரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் இணைக்கப்பட்டுள்ள நன்கொடை ரசீதுகளின் அடிப்படையில் நடத்திய ஆய்வில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில் மட்டும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் சுமார் ரூ.690.67 கோடி நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏடிஆர் என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு கடந்த 2004-2005 நிதியாண்டிலிருந்து 2020-2021ஆம் நிதியாண்டு வரை தேசிய கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.15,077.97 கோடி நன்கொடையாக பெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில், 8 தேசிய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் ரூ.426.74 கோடி நிதி கிடைத்துள்ளதாகவும், 27 மாநிலக் கட்சிகளுக்கு அதே ஆண்டில் இதேபோல ரூ.263.92 கோடி நன்கொடையாக பெற்றுள்ளதாகவும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

2020-21 நிதியாண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சியே அதிக நன்கொடைகளை பெற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.178.78 கோடி நிதி கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜகவுக்கு ரூ.100.5 கோடி நிதி கிடைத்துள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெற்ற 690.67 கோடி ரூபாயில் 47.06 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவை என்றும் ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.