கனடா காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேரணியில் இந்திய குழுவினர் கையில் ஏந்திச் சென்ற தேசியக் கொடிகள் அனைத்திலும் ”மேட் இன் சைனா” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்து சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர்.

சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட கொடியில் 100% பாலிசிஸ்டர் எனும் வாசகத்தின் கீழ் ’மேட் இன் சைனா’ என அச்சிடப்பட்டிருந்தது. இந்தியப் பிரதிநிதிகள் இந்தியாவில் தயாரிக்கப்படாத, சைனாவில் தயாரிக்கப்பட்ட கொடிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என சர்ச்சை வெடித்துள்ளது.