விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது பல்வேறு நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது..
மேலும் “ விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களையும் மதுபானங்களையும் உட்கொள்ளக்கூடாது.. விநாயகர் ஊர்வலத்தின் போது ஆபாச நடனமோ, வார்த்தைகளோ இடம்பெற கூடாது.. குறிப்பிட்ட அரசியல் கட்சி, சமூகம், சாதியை குறிப்பிட்டு நடனம், பாடல் எதுவும் இசைக்கப்படக்கூடாது..
எந்த அரசியல் கட்சிக்கும், மத தலைவருக்கும் ஆதரவாக பிளக்ஸ், போர்டு அமைக்க கூடாது.. மதம் அல்லது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் நிகழ்வுகள் எதுவும் இடம்பெறக்கூடாது.. ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.. இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நிபந்தனைகள் மீறினால் ஊர்வலத்தை நிறுத்த சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கும் அதிகாரம் உண்டு..” என்று நீதிபதி உத்தரவிட்டார்..