’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், அரபிக்குத்து பாடல் மட்டும் ஒரு பக்கம், தனது சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு படத்தின் வெற்றி, அதில் பங்கேற்ற அனைவரையும் உயர்த்தும். ஒரு படத்தின் தோல்வி, அந்த படத்தின் அத்தனை அம்சங்களையும் சாகடிக்கும். ஆனால், ஒரு படம் சுமாராக இருந்தும், அதில் இடம் பெற்ற பாடல், மெகா ஹிட் ஆகி, அது பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மில்லியன்களை கடந்து கொண்டிருந்தால், எப்படி இருக்கும்..?

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரித்து, நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் எதிர்மறை விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள், ட்ரோல் கன்டென்டாக மாறி இன்றும் அவை சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், படத்தை ரிலீஸிற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பை எகிற வைத்தது, அதில் இடம் பெற்ற ”அரபிக் குத்து” பாடல் தான். அனிருத் இசையில் , ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த அந்த பாடல், லிரிக் வீடியோவாக வந்ததிலிருந்தே பயங்கர எதிர்பார்ப்பையும், வியூவ்ஸ்களையும் அள்ளியது. விஜய்-பூஜாவின் வித்தியாசமான நடன அமைப்பு அந்த பாடல் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில், பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை 250 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் பக்கத்தில் கடந்து இன்னும் பார்வையாளர்களை குவித்துக் கொண்டிருக்கிறது ‛அரபிக்குத்து’. இந்த பாடலின் புரியாத வரிகளை எழுதியவர், நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பார்வையாளர்களை பெற்று, அரபிக்குத்து பாடல் கூடுதலாக 300 மில்லியன் பார்வையாளர்களை தாண்டும் என்றே தெரிகிறது. இந்நிலையில், அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ 470 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.