பெங்களூரு சித்தாபுராவில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சித்தாபுரா அருகே குடியிருப்பில் வசித்து வந்த அகிலா என்ற 23 வயது பெண் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஒயிட்பீல்டு பகுதியில் இரவு 9.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வேலை முடித்து இவர் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கின்றார். அப்போது சாலை ஓரத்தில் பள்ளம் இருந்துள்ளது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் பள்ளம் தெரியவில்லை. அந்த பள்ளத்தில் வண்டி பாய்ந்துள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த மின்கம்பத்தின் அருகே மின்சாரம் அறுந்து கிடந்துள்ளது. இதை அவர் அறியாமல் அதன்மீது விழுந்திருக்கின்றார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் அந்த பெண் . அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
இதனால் அவரது பெற்றோர்கள் காலையில் அலுவலகம் சென்ற பெண் இரவு இப்படி ஆகிவிட்டதே என கண்ணீவிட்டு கதறி அழுதனர். இந்நிலையில் பெங்களூரு மாநகராட்சியின் சாலை கட்டமைப்பு சரியில்லாததே இதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பெங்களூரு மின்பகிர்மான நிறுவனமும் இதற்கு பதில் கூறியாக வேண்டும் என அவர்கள் கூறினர்.
மழை நீடிக்குமா?
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ளம்புரண்டு ஓடுகின்றது. பேருந்துகள், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளக்காடாக கிடக்கின்றது. இந்நிலையில் அடுத்த 2-3 நாட்களுக்கு பெங்களூருவில் மழை நீடிக்கும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மைய அதிகாரி கீதா அக்னிகோத்ரி தெரிவித்துள்ளார்.
கடற்கரை ஒடடியுள்ள பகுதிகள் மற்றும் வடக்கு கர்நாடகாவில் 5 நாட்களுக்கு மழைஇருக்கும். என்றும் கூறியுள்ளார்.