லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடத்தலாம் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார். இப்பட தயாரிப்புக்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை எனக்கூறி கடந்த 2015ஆம் ஆண்டு லதா ரஜினிகாந்த் மீது, அபிர்சந்த் நஹார் முரளி, பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196 (போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது), 420 (மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது), 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
![உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு..! என்ன வழக்கு தெரியுமா?](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/xsrlacgsnek_latha-rajinikanth_625x300.jpg)
இந்நிலையில், லதா ரஜினிகாந்த் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, குற்றப்பத்திரிகையில் லதா ரஜினிகாந்த் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 (ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது) ஆகிய பிரிவு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்தும் தனக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை முழுமையாக ரத்து செய்யக்கோரியும் லதா ரஜினிகாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.