ஒரே சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர் என இரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது..
தமிழக போக்குவரத்துத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், விரைவில் பணி ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.. இதுபோன்ற காரணங்களினால் விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதனிடையே தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த உடன் புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதன்படி, பணியாளர் தேர்வின் போது ஓட்டுநர், நடத்துனர் என இரு பணிகளையும் மேற்கொள்ளும் தகுதி உள்ள பணியாளர்களுக்கு (டி&சி பணியாளர்கள்) முக்கியத்துவம் அளிக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என இரு பணிகளையும் சேர்ந்து பார்க்க்கூடிய பணியாளர்களை அதிக அளவில் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.