நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 12,840 பேரில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைவாகும். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 131 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 100% ஆகும்.

சென்னையில் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.