அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சி, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை மறைக்கவே திமுக இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.
எத்தனை சோதனைகள் நடத்தினாலும் அனைத்தையும் சட்டரீதியாக சந்திப்போம். முன்னாள் அமைச்சர்கள் சோதனைகளுக்காக மனம் தளராமல் கட்சி பணியாற்றுவர்கள். கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி வருகிறது. அதிமுகவின் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னனியில் திமுகவின் திட்டம் கானல் நீராக போகும். பகல் கனவு பலிக்காது. சோதனை என்கிற பெயரில் காவல்துறை தவறாக வழி நடத்தப்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.