மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்தது. இதை தொடர்ந்து மின்கட்டணம் உயர்வு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில் மின் நுகர்வோர் கட்டணத்தை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மின் கட்டணத்தை கடந்த 10ஆம் தேதி முதல் தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த மின்கட்டண உயர்வால் வீட்டு வாடகை உயரும் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவது தொடரும் என்றும், அதற்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் என்றும் தெரிவித்தார். மேலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், விசைத்தறிக்கு 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ஆண்டுக்கு 6 சதவீத உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்கூட்டத்தினை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.