“தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் என்பவர் ஒரு கோஷ்டி என்றும் அவர் கட்சி அல்ல என்றும் சாடினார். கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஓபிஎஸ்-க்கு மக்கள் ஆதரவும் இல்லை, தொண்டர்கள் ஆதரவும் இல்லை என தெரிவித்த ஜெயக்குமார், ’சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என்ற கர்ணன் படத்தின் பாடலை பாடி வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார் என விமர்சனம் செய்தார். திமுக அரசுக்கு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்தி உள்ளோம்” என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.