தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வந்த பெற்றோர், 2-வது பிரேத பரிசோதனை செய்யக்கோரி மகளின் உடல் மீது உப்பைக் கொட்டி 44 நாட்களாக பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார். தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தந்தை குற்றம்சாட்டி வந்தார். பின்னர், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, இளம்பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனக்கூறி, உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே, உடற்கூராய்வு முடிந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணின் உடலை குழிதோண்டி அவற்றில் உப்புக் கொட்டி பாதுகாத்து வந்துள்ளனர். தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, 2-வது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மகளின் உடலை 44 நாட்களாக உப்பைக் கொட்டி பாதுகாப்பு வந்துள்ளனர். இந்நிலையில்தான் அப்பெண்ணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டு மும்பைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.