பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் ’’உனக்கு 1ம் தேதிதான் குழந்தை பிறக்கும் எனக்கூறி அரசு மருத்துவர்கள் அலைக்கழித்த நிலையில் நடந்தே சென்று தனியார் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா(22) . நேற்று இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதும் வெளியில் ஸ்கேன் எடுத்து வரும்படி கூறியுள்ளார். வலியுடனே சென்று ஸ்கேன் எடுத்து வந்து மருத்துவரிடம் காண்பித்துள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் 1ம் தேதிதான் குழந்தை பிறக்கும் எனக் கூறி , கருவில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்து வெளியே அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நீங்கள் வேண்டுமானால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனால் வலியுடன் வெளியேறிய அந்தப் பெண் நடந்தே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை அடைந்தார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக பிரசவத்திற்கு ஏற்பாடு செய்தனர். சுகப்பிரசவத்தில் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அலட்சியத்துடன் நடந்து கொண்ட திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.