சீனாவில் படிகங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத டைனோசர் முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் கியான்ஷான் பகுதியில் பீரங்கி குண்டு அளவிலான 2 டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் பழங்கால புவியியல் இதழில் வெளியாகியுள்ளன. இவை டைனோசர்கள் காலத்தின் இறுதிக் காலமான கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த முட்டைகள் என்பது தெரியவந்துள்ளது. அந்த முட்டைகள் இரண்டும் கிட்டத்தட்ட முழுமையான கோளவடிவிலேயே இருக்கின்றன. முட்டைகளின் அளவு, ஓடுகளின் இறுக்கமான அமைப்பு மற்றும் அவற்றின் தனித்துவமான கோள வடிவம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் அவை புதிய வகை டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை என்று பழங்கால ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
சீனாவில் கிரெட்டேசியஸ் காலத்தில் கிடைக்கப்பெற்ற டைனோசர் முட்டைகளை அவற்றின் அபாயகரமான அளவுகள், வகைகள் மற்றும் பரவலான விநியோகம் ஆகியவற்றைக் கொண்டு வகைப்படுத்துகின்றனர். அதன்படி, சீனாவில் இதுவரை தோராயமாக 16 டைனோசர் குடும்பங்கள் மற்றும் 35 ஓஜெனெராக்கள் பதிவாகியுள்ளன. மேலும், மாறிவரும் வானிலையால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகளில் ஓடுகளின் பெரும்பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய 2ஆம் நிலை முட்டை ஓடு அலகுகள் போன்றவை பாதுகாக்கப்படவில்லை என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 முட்டைகளில் ஒன்று பாதி சிதைந்திருக்கிறது என்றும், அதனால்தான் அதனுள் உருவாகியுள்ள கால்சைட் படிகங்களின் கொத்துகள் தெரியவந்தது என்றும் கூறுகின்றனர். இரண்டுமே கிட்டத்தட்ட கோள வடிவில், 4.1 இஞ்ச் மற்றும் 5.3 இஞ்ச் நீளமும், கிட்டத்தட்ட 3.8 இஞ்ச் மற்றும் 5.2 இஞ்ச் அகலமும் கொண்டவை. அவை கிட்டத்தட்ட பீரங்கிக்குண்டுகளின் அளவில் இருக்கின்றன என்றும் கூறியுள்ளனர்.