பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், அதிக அளவு குடிபோதையில் தள்ளாடியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாக சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான், சமீபத்தில் அம்மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றிருந்தார். அவர் அங்கிருந்து டெல்லிக்கு தாமதமாக திரும்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல், நடக்கவே முடியாத அளவுக்கு மது போதையில் தள்ளாடியதால் பகவந்த் மான், லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அந்த விமானத்தின் பயணம் 4 மணி நேரம் தாமதமானதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் விமானத்தை தவறவிட்டதால் ஆம் ஆத்மியின் தேசிய அளவிலான கூட்டத்தில் பகவந்த் மானால் பங்கேற்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பகவந்த் மானின் செயலால் உலகெங்கிலும் உள்ள பஞ்சாபிகளுக்கு அவமானம் என்று கூறியுள்ள சுக்பிர் சிங் பாதல், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. முதலமைச்சர் பகவந்த் மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அரசியல் எதிரிகள் கையாளும் மோசமான தந்திரம் இது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மல்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பிற்கு அதிக அளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதை கண்டு பொறுக்க முடியாமல் பகவந்த் மான் மீது இது போன்ற அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் மல்விந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், திட்டமிட்டபடி ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பிவிட்டதாகவும் மல்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.