பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை மதகில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால், கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி. திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரி பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளாவுக்கு 19.55 டிஎம்சியும் நீர் பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும். இந்த 9 அணைகளில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது. இந்த அணை மட்டும் 17 டிஎம்சிக்கும் அதிகமாக நீர்ப்பிடிப்பு கொண்டது. இது ஒருமுறை நிறைந்து விட்டால், ஒரு ஆண்டுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

இந்நிலையில், இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி இருந்தன. பரம்பிக்குளம் அணையும் நிரம்பி இருந்தது. மொத்த உயரமான 72 அடி உயரத்தில் 70 அடிக்கு தண்ணீர் இருந்தது. பரம்பிக்குளம் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதைக்கு சுரங்கங்கள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. அணையில் அவசர காலங்களில் தண்ணீரை வெளியேற்றுவதற்காகவும், உபரி நீர் வெளியேற்றுவதற்காகவும் முக்கியமாக 3 ஷட்டர்கள் உள்ளன. இந்த ஷட்டர்கள் திறக்கப்பட்டால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வனப்பகுதி வழியாக கேரளாவை சென்றடையும். இந்த 3 மதகுகளில் நடுவில் உள்ள மதகில் இன்று அதிகாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக பி.ஏ.பி. முக்கிய அதிகாரிகள் மற்றும் கேரள நீர் பாசன துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வைவயிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர கேரள மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் அணையை ஆய்வு செய்ய உள்ளனர். பரம்பிக்குளம் அணையை தமிழக அரசு தான் பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.