மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளன.
நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித்குமார் 3-வது முறையாக இணையும் படம் ’துணிவு’. இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைக்கிறார். 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 25 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷெட்யூலில் சில முக்கிய அதிரடி காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு Heist Thriller திரைப்படமாகத் தயாராகி வருவதாகத் தகவல் பரவியது. அதாவது, 1987ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய நிஜ வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை ஹெச்.வினோத் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. 12 முதல் 15 கொள்ளையர்கள் காவல்துறை உடையணிந்து துப்பாக்கி முனையில் சுமார் 4.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதாவது இந்திய மதிப்பில் 36 கோடிக்கும் மேல் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் பொதுமக்கள், வங்கி ஊழியர்கள், மற்றும் காவல்துறையினர் என யாருக்கும் சிறிய காயம் கூட ஏற்படாமல் இக்கொள்ளையை மிகவும் கச்சிதமாக நடத்து முடித்து மொத்த பணத்துடன் தப்பினர்.
இந்த கொள்ளைச் சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறுகையில், இது ஒரு நேர்த்தியான கொள்ளை என விவரித்துள்ளது. இதுவரை நடந்த வங்கிக் கொள்ளைகளிலே இந்த கொள்ளை சம்பவமே இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வங்கிக் கொள்ளையாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ’தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கள ஆய்வில் சிறந்து விலங்கக் கூடிய இயக்குநர் ஹெச்.வினோத் ’துணிவு’ படத்திற்கும் தனது கள ஆய்வை துணிந்து செய்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.