காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, முழு உடல் தகுதியடைந்து தற்போது மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பும்ரா அணியில் இடம்பெறாமல் இருந்ததால் டெத் ஓவர்களில் மற்ற பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஆசியக் கோப்பையிலிருந்து கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிவரை பந்துவீச்சு சரியில்லாமல் போனதாலேயே இந்தியா படுதோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால், அணியில் பும்ரா எங்கே என்ற கேள்வியை ரசிகர்கள் அனைவரும் எழுப்பினர்.
இந்நிலையில், இன்று நடைபெற உள்ள ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பும்ரா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக விலகிய அவர் தற்போது முழுவீச்சில் பந்து வீசுவதாகவும், முழு உடல் தகுதியை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் போட்டியில் பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, ரன்களை கட்டுப்படுத்துவதிலும், விக்கெட்டை வீழ்த்துவதிலும் இந்தியா திணறியது. தற்போது நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பங்குபெற இருப்பது அணிக்கு பெரிய பலமாக அமையவிருக்கிறது.