நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வல்லகுண்டாபுரம் கிராமத்தில் கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர்தான் கவுண்டமணி. இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால் தான், திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. நாடகங்களில் அல்லது படங்களில் நடிக்கும்போது, யார் என்ன பேசினாலும் அதற்கு எதிராகப் பேசி கவனம் ஈர்ப்பது இவரது வழக்கம். அதனால் அவரை கவுண்டர்மணி (Countermani) என சக நடிகர்கள் அழைத்தனர். பின்னர் 16 வயதினிலே படம் நடிக்கும்போது அவருக்கு அந்தப் பெயரையே டைட்டிலில் பயன்படுத்த வைத்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அந்தப் படத்திலிருந்துதான் அவர் கவுண்டமணி என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்தில் உடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் இருவரும் மாபெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கின்றனர். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழ காமெடிதான். இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில், சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், நடிகர் கவுண்டமணிக்கு சாந்தி என்பவருடன் 1963ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கவுண்டமணியா இது? திருமணத்தில் போது அடையாளமே தெரியலையே..!! என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.