ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள், அதிமுகவின் உண்மையான தொண்டர்களை விரைவில் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமித்த ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில், சென்னை அசோக் நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ”எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனின் அனுபவங்களை ஆலோசனைகளாக பெற்றதாக கூறினார். மேலும், விரைவில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களை சந்திப்பேன் எனவும் பொறுத்திருந்து பாருங்கள் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதனை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்” என கூறிச் சென்றார்.