’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட நகைகள், உடைகள் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் ’பொன்னியின் செல்வன்’. இத்திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்ட நகைகள், உடைகள் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதையை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படக்குழுவினர், நகைகளை ஏலத்தில் விட திட்டமிட்டுள்ளனர். பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிகை த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் வித விதமான நகைகளை அணிந்திருந்தனர். இருவரும் சுமார் 2 கிலோ வரையிலான நகைகளை அணிந்து நடித்துள்ளனர். தங்கத்தில் ஒரு சில நகைகளும், கவரிங் மற்றும் ஐம்பொன்னில் சில நகைகளும் செய்யப்பட்டிருந்தது.
சோழ கால நகைகள் குறித்த கல்வெட்டுகளின் அடிப்படையில் கலைஞர்கள் மூலம் உருவாக்கப்பட்டது. தற்போது இதே போன்ற வடிவமைப்பில் பெண்கள் நகை அணிந்து கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில், பிரபல நகை கடை ஒன்றில் சோழாக் கலெக்ஷன் என்ற பெயரில் விற்பனையை தொடங்கியுள்ளது. ரசிகர்கள் படித்து வியந்த சோழ சாம்ராஜ்யத்தின் கதையை திரை வழியாக பார்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர், போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. முந்தைய காலங்களில் பத்மினி, போன்ற பிரபல நடிகைகள் அணிந்திருந்த நகைகள், புடவைகள் போன்றவை ஏலத்திற்கு விடப்படும். அதை பல ரசிகர்களும் ஆவலுடன் வாங்கியுள்ளனர். தற்போது, அதே போன்று தான் பொன்னியின் செல்வன் படக்குழுவும் இந்த இரண்டு இளவரசிகளின் நகைகளை ஏலம் விட உள்ளது.
இதை அறிந்த பல முன்னணி நிறுவனங்களும் அந்த நகைகளை வாங்குவதற்கு போட்டி போட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, முன்னணி நிறுவனங்கள் சோழர்கால நகைகள் என்று அந்த நகைகளை மக்களிடம் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர். எனவே, விரைவில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் அணிந்த நகைகள் ஏலம் விட இருக்கிறது. இது பெண்களுக்கு நகை மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.