மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீபாவளி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கடந்த ஆட்சி காலத்திலேயே மத்திய அரசு தொடங்கியது. இதனை கண்டித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதியை ஏற்று வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.
![அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்..!! தீபாவளி வரை ஒத்திவைப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/876940.jpg)
இந்நிலையில், மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் கடந்த மாதம் 28ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைத் தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. மேலும், புதுச்சேரிக்கு இரண்டு கம்பனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
![அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்..!! தீபாவளி வரை ஒத்திவைப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/1664519123501.jpeg)
இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மேலும் 200-க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இடதுசாரி கட்சியினரும், விசிகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டம் பெரிதான நிலையில், இது தொடர்பாக விவாதிக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
![அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்..!! தீபாவளி வரை ஒத்திவைப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Tamil_News_large_3136909.jpg)
இந்தக் கூட்டம் பாதியிலேயே நிறுத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் மின்துறை ஊழியர்கள் சங்கத்தினரும் தெரிவித்தனர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சரவைக் கூட்டம் மீண்டும் கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீபாவளி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.