தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரையிடப்படுகிறது.
’விக்ரம்’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதுவரை தமிழ் திரைத்துறையின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து கமலுக்குத் தமிழ் திரையுலகிற்கு கம் பேக் கொடுத்தார். விக்ரம் படத்தில் லோகேஷ், கைதியின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்த்ததிற்கும் மேல் பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரையரங்குகளை அதிரச்செய்தார். மேலும், ‘சூர்யா’ வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.
மேலும், படம் வெளியாகிய அடுத்த மாதமே ஓடிடியில் இப்படம் வெளியாகினாலும், 100 நாட்களைக் கடந்து பல திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடியது. 100-வது நாள் முடிவில் விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியது. கமல்ஹாசனே இப்படத்திற்குத் தயாரிப்பாளர் என்பதால் அவருக்கு டபுல் ஜாக்பாடாக அமைந்தது. மேலும், அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும், தனது தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து படம் தயாரிக்க உள்ளனர்.
இந்நிலையில், அக்.5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் ’விக்ரம்’ படம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் ஓப்பன் சினிமா என்ற பிரிவில் ’விக்ரம்’ திரையிடப்படும்.