திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, துணைப் பொதுச்செயலாளராகவுள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் இருக்கும் என்று திமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, மகளிர் ஒருவர் துணைப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு மகளிர் ஒருவருக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி கூடும் நிலையில், துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை அறிவிக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த 2015 முதல் திமுகவின் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக தற்போது பணியாற்றி வருகிறார். இதையடுத்து, இவர் வகித்து வரும் மகளிர் அணி செயலாளர் பொறுப்பு வேறொரு மகளிருக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.