இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இன்று சண்டிகரில் இதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் , நமது முன்னோர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பெருமை மிக்க பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில் நவீன ஆயுதங்களை கையாள புதிய படைப்பிரிவு உருவாக்க அரசு அனுமதித்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் புதிய அமைப்பு உருவாக்கப்படுவது இது முதல் முறையாகும். இதனால் 3 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை இணைத்துக் கொள்வது சவாலாக உள்ளது. மிக முக்கியமான இந்தியாவின் இளைஞர்களின் திறன் பயன்படுத்துவதற்கு அதை நாட்டிற்கு சேவையாக மாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.
விமானப்படையில் இணையும் அக்னி வீரர்கள் பணியை சிறப்பாக செய்யவும், சரியான திறன்களை பெறவும் உறுதி செய்ய பயிற்சி முறை மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் துவக்க கட்ட பயிற்சிக்காக 3 ஆயிரம் அக்னி வீரர்கள் இணை உள்ளனர்.
இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் அக்னி வீர்களாக பெண்களையும் இணைக்கும் திட்டம் உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகள் செயல்பட்டு வருகின்றன என அவர் பேசினார்.