ஓட்டல் அறையில் போதைப் பொருள் கொடுத்து பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு டெல்லி, ஆதர்ஷ் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் 32 வயது பெண் ஒருவர், போதைப் பொருள் கொடுத்து தன்னை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். டெல்லி ஆதர்ஷ் நகரில் உள்ள காவல் நிலையத்தில் இப்பெண் முன்னதாக புகார் அளித்துள்ள நிலையில், ராஜஸ்தான் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு பேரில் ஒருவரான அஜய், அப்பெண்ணுக்கு ஏற்கனவே தெரிந்தவர் எனக் கூறப்படும் நிலையில், 39 வயதான அஜய் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாகவும், 3 பேர் சேர்ந்து தனக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும், குளிர்பானம் கொடுத்து சுயநினைவை இழந்த பிறகு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ”அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனையும் செய்யப்பட்டது. அவரது புகாரின் அடிப்படையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சந்தேகத்துக்குரிய நபர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்” என்று முன்னதாக வடமேற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் உஷா ரங்கனானி தெரிவித்துள்ளார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் முன்னதாக உத்திரப்பிரதேசத்தில் சிறுமியை கூட்டுப் பலாத்காரம், செய்துவிட்டு விபத்தாக மாற்ற முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்திரப்பிரதேசம் பிரயாக்ராஜில் ஆகஸ்ட் 10ஆம் தேதி, சிறுமியை கடத்திய 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரம் தூக்கி எறிந்தனர். முன்னதாக மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் இந்த வழக்கை விபத்து என திசை திருப்பியதாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று சிறுமியை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் அவருடைய இரண்டு நண்பர்களும் திட்டமிட்டு கடத்தியுள்ளனர். அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை மூவரும் கொடுமையான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த சிறுமியின் பிறப்புறுப்பை கொடூரமாக சேதப்படுத்தியுள்ளார்கள் என்றும் உடலின் பல இடங்களில் கடித்த காயங்கள் இருப்பதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயத்துடன் சாலையில் சுய நினைவின்றி கிடந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து முன்னதாக சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், இந்த வழக்கை விபத்தாக காவல்துறையினர் மாற்றியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போதுதான் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்” எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.