’பிஎம் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 12-வது தவணைத் தொகை இன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், மிக முக்கியமான திட்டம் தான் ’பி எம் கிசான்’ (PM Kisan) திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியாக கடந்த மே 30ஆம் தேதி 11-வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் கிசான் தவணைத் தொகையான 2,000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், மிக விரைவில் பன்னிரண்டாவது தவணைத் தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், 12-வது தவணை விவசாயிகள் வங்கிக் கணக்கில் இன்று செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார். இதற்காக 16 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.