சிறுமியை கடத்தி போதை பொருள் கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். பல இடங்களில் தேடிய சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமி போதைக்கு அடிமையாகி மோசமான நிலையில் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது நல்ல நிலைமையில் இருக்கும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. தெருவில் நடந்து சென்ற சிறுமியை கடத்திய 4 பேர் கொண்ட கும்பல் திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட பல இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமிக்கு அதிக அளவில் போதைப்பொருள் அளித்து மயக்க நிலையிலேயே வைத்துள்ளனர். அந்த நிலையிலும், சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.