பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் குவின்ஸியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், நேற்று புதுவரவாக மைனா நந்தினியும் எண்ட்ரி கொடுத்தார். தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். முதல் வார இறுதியில் எலிமினேஷன் எதுவும் இல்லாததால் போட்டியாளர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினார் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி இதுவரை நடந்த 5 சீசன்களிலும் 30 நாட்களுக்கு மேல் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும் முதல் வாரத்திலேயே நடந்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றைய எபிசோடில் குவின்ஸியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. குவின்ஸி விக்ரமனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அருகில் இருந்த அசல், குவின்ஸியின் கையை பிடித்து தடவிக்கொண்டே இருந்தது பார்ப்பவர்களுக்கு சற்று நெருடலாகவே இருந்தது. அசலின் இந்த நடவடிக்கைகள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஏற்கனவே குவின்ஸி பலமுறை கூறியும் விடாமல் அவரை பின் தொடர்ந்து வந்தார் அசல். தற்போது ஒருபடி மேலே போய் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அசல் கோளாரை சாடி வருகின்றனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள், அசலை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் பெண்களுக்கு இதுபோன்று நடக்காமல் இருக்கும் என தெரிவித்து வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அசல் மீது பிக்பாஸ் ஆக்ஷன் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.