அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்து பேசிய அவர், ”மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும். சுய உதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சுய உதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்தவித கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு கடன் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கி தயாராக இருக்கிறது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, ’தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2,750 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்தார். சுய உதவி குழு கடன்களுக்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதேபோல சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும். மொத்தம் 99.5 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான பயன்களை பெற்றுக் கொள்ளலாம்”. இவ்வாறு அவர் பேசினார்.