வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது.
மேலும், வர்த்தக சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சாலை போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிப்பது, நேர விரய நடைமுறையாக இருந்தது. எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும்.
அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், தயாரிப்பாளர் அல்லது மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை முகமை மட்டுமே வைத்திருக்க முடியும். வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
