பசிபிக் கடலின் மீது கடந்த இரண்டு மாதங்களாக விமானங்களை இயக்கிய பல்வேறு நாட்டு விமானிகள், பறக்கும் தட்டுகள் போல் மர்ம விமானங்கள் பறப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.
பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் அல்லது விசித்திரமான உருவம் கொண்ட வேற்று கிரகவாசிகள் வசிக்கக் கூடும் என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. விண்வெளியில் இருந்து அடிக்கடி பறந்து வரும் பறக்கும் தட்டுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சில மாதங்களுக்கு முன் திடீரென முளைத்த உலோக தூண்கள் போன்றவை இந்த சந்தேகத்தை மேலும் அதிகமாக்கி வருகின்றன. இந்நிலையில், பசிபிக் கடலின் மீது கடந்த இரண்டு மாதங்களாக விமானங்களை இயக்கிய பல்வேறு நாட்டு விமான நிறுவனங்களின் விமானிகள், மர்ம விமானங்கள் பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஹாவாயின் ஏர்லைன்ஸ் விமானங்களின் விமானிகள் இவற்றை பார்த்ததாக கூறுகின்றனர். இது பற்றி கட்டுபபாட்டு அறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், விமான கட்டுப்பாட்டு அறையில் இந்த மர்ம விமானங்கள் பறப்பது எதுவும் பதிவாகவில்லை என தெரிகிறது. தனது விமானத்துக்கு மேல் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் அடிக்கு மேல் 7 மர்ம விமானங்கள் பறப்பதாகவும், அவை தனது விமானத்தை சுற்றி வட்டமடிப்பதாகவும் மார்க் ஹஸ்லி என்ற விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரை போல் பல விமானிகளும் இவற்றை கண்டுள்ளனர். அவற்றை வீடியோ பதிவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.