பயனர்களின் சாதனங்களில் இருந்து அதிக இணையத்தை பயன்படுத்தி, சார்ஜை வேகமாக குறைக்கும் 16 ஆண்ட்ராய்டு செயலிகளை Google Play Store நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல Ars Technica இன் அறிக்கையின்படி, பாதுகாப்பு நிறுவனமான McAfee ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் சார்ஜை குறைக்கும் அளவிற்கு செயலிகள் இருக்கிறது என கண்டறிந்தது. இதனையடுத்து கூகுள் நிறுவனம் Google Play Store-இல் இருந்து 16 செயலிகளை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி இந்த செயலிகள் என்ன செய்கிறது என கேட்டால், செயலிகளை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு, விளம்பரங்களைக் கிளிக் செய்ய செயலியின் பின்னணியில் வலைப்பக்கங்களைத் திறந்து விளம்பர மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு, ஆப்ஸில் மொத்தம் 20 மில்லியன் இன்ஸ்டாலேஷன் இருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அகற்றப்பட்ட செயலிகளின் பட்டியலில் BusanBus, Joycode, Currency Converter, High-Speed Camera, Smart Task Manager, Flashlight+, K-Dictionary, Quick Note, EzDica, Instagram Profile Downloader மற்றும் Ez Notes ஆகியவை அடங்கும். இந்தப் செயலிகள் திறக்கப்பட்டவுடன் குறியீட்டைப் பதிவிறக்கும் என்று McAfee கண்டறிந்துள்ளது. மேலும், அவை பயனரை எச்சரிக்காமல், இணைப்புகள் மற்றும் விளம்பரங்களைக் கிளிக் செய்யாமல் இணையப் பக்கங்களைத் திறப்பதற்கான அறிவிப்புகளைப் பெறுகின்றன. இந்தச் செயல்பாடு இந்த விளம்பரங்களின் மீதான ஈடுபாட்டை செயற்கையாக அதிகரிக்கும். இது விளம்பர மோசடியின் ஒரு வடிவமாகும் என இந்த பிரச்சனையை கண்டறிந்த McAfee நிறுவனம் தெரிவிக்கிறது.

அகற்றப்பட்ட செயலிகள் அனைத்துமே “com.liveposting” மற்றும் “com.click.cas” எனப்படும் ஆட்வேர் குறியீட்டுடன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறியீடுகள் என்ன செய்யும் என்றால் இணைப்புகள் மற்றும் விளம்பரங்களைக் கிளிக் செய்ய அனுமதிக்கும். இவை அனைத்துமே பயனாளர்களுக்கு தெரியாமலேயே நடக்கும். இதனால், நெட்வொர்க் பயன்பாடு அதிகரித்து மொபைல் பேட்டரி ட்ரைனாவதற்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையை அறிந்த பிறகு, Play Store இது தொடர்பாக இருந்த அனைத்து செயலிகளும் (மொத்தம் 16) அகற்றப்பட்டதாகவும், பயனர்களின் சாதனங்களில் இந்த பயன்பாடுகளை Play Protect தடுக்கும் என்றும் கூகுள் Ars Technica நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பிறகு, கூடுதல் குறியீட்டைப் பதிவிறக்கும் என்ற McAfee இன் அறிக்கைதான் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்குவதற்கு கூகுளுக்கு உதவியாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை.