பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகளை எரிக்கும் பழக்கத்தை கைவிடும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ரூ.1 லட்சம் வழங்குவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் விவசாயிகள் அதிகளவில் பயிர் கழிவுகளை எரிக்கின்றனர். பயிர் கழிவுகளை எரிப்பதால், நிலத்தின் வளத்தை இழப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பயிர் கழிவுகள் எரிக்கும் நடைமுறையை கைவிட செய்யும் நோக்கில், பயிர் கழிவுகளை எரிக்கும் நடைமுறையை தவிர்க்கும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு லட்சம் வழங்குவதாக பஞ்சாப் சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வும், அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான் விடுத்துள்ள அறிக்கையில், “நெற்பயிர்களை எரிப்பதால், நிலத்தின் வளத்தை இழப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. பஞ்சாப் மக்கள் இயற்கையை மிகவும் நேசிக்கிறார்கள். பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்கள் அறிந்ததால், இந்த போக்கை கைவிடுகின்றனர். இந்த நடைமுறையை மக்கள் முற்றிலும் கைவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. பயிர்கழிவுகளை எரிக்காத விவசாயிகளை கவுரவப்படுத்தினேன். இது ஒரு தனித்துவமான முயற்சியாகும். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க விவசாயிகள் அதிகளவில் மரங்களை நட வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.