தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்து பெரிய தீவிபத்து சம்பவங்களை தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 180 தீ விபத்துகள் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும், உயிர் பலி எதுவும் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தினத்தன்று, காலை, 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று காவல்துறை உத்ததரவிட்டது. அந்த நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக, சென்னையில் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.