உயர் நீதிமன்ற கட்டிடத்தின் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டியதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தூரைச் சேர்ந்த மினு ஆன்டனி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் கீழமை நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கில் பிரதிவாதியாக இருந்தார். அவரது மனைவி ஜீவானம்சம் கேட்டு தொடர்ந்த வழக்கில் மனைவிக்கு ஜீவானம்சம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இவருக்கு வழங்கப்பட வேண்டிய தீர்ப்பு தாமதம் ஏற்படுவதாக கூறி அவர் நீதிமன்றக் கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
நீதிமன்ற கட்டிடத்தின் 11வது மாடியில் அந்த நபர் அமர்ந்திருப்பதை பார்த்த காவல்துறையினர் மெதுவாக சென்று அவரை பின்பக்கம் இருந்து பிடித்து கீழே இறக்கினர். பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மற்றொரு உயர்நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.