என்.ஐ.ஏ. என்னிடம் விசாரணை நடத்தினால் பல உயர் அதிகாரிகள் பதவி பறிபோகும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் , காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது அண்ணாமலை , காவல்துறைக்கு முன்னதாகவே அனைத்தையும் வெளியிடுகின்றார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார். அதே நேரத்தில் கடலூரில் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்து இது பற்றி கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் குரங்குபோல் சுற்றி சுற்றி வருகின்றீர்கள். நாயி, பேயி கூறியதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என காட்டத்துடன் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் செய்தியாளர்களிடம் இது பற்றி பேசியுள்ளார். ’’அமைச்சர் செந்தில் பாலாஜி தேவையில்லாமல் பேசுகின்றார் . என்.ஐ.ஏ. என்னிடம் விசாரணை நடத்தட்டும். நான் என்னிடம் உள்ள ஆதாரங்களை அளிக்க தயாராக இருக்கின்றேன். ஆனால் , என்னிடம் விசாரணை நடத்தினால் பல உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும். ’’ என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தின் துவக்கம் முதலே பா.ஜ.க. இந்த விவகாரத்தில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றது. தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பா.ஜ.க. இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற வகையில் பேசி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.