நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஒருவர் குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசு சார்பில் ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு ’கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் ’கர்நாடக ரத்னா’ விருதை வழங்கினர்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால், அவர் மீது அம்மாநில மக்கள் இன்றளவும் அன்பு செலுத்தி வருகின்றனர். நேற்று நடந்த விழாவில் ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசியதை கேட்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். முன்னதாக இந்த விழாவில் கலந்துகொள்வற்காக நடிகர் ரஜினி பெங்களூருவுக்கு தனி விமானத்தில் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் விமான நிலையத்திற்கே வந்து ரஜினியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதுமட்டுமின்றி நேற்றைய விழாவின் போது திடீரென மழை பெய்தது. இதில், ரஜினிகாந்த் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு கர்நாடக அமைச்சர் முனிரத்னா என்பவர் அவருக்கு குடைபிடித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைக் கண்ட நெட்டிசன்கள், ஒரு மாநிலத்தின் அமைச்சர் இப்படியா நடிகர் பின்னால் செல்வது என்று அந்த புகைப்படங்களை ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ரஜினியை நேரில் அழைத்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடி அவருக்கு ராஜ மரியாதை கொடுத்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.