சென்னையில் மழை பெய்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் விழுந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர்.
சென்னையில் பெரம்பூர் அருகே பேரக் சாலையில் 24 வயது இளம்பெண் பிரீத்தி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பாதாள சாக்கடை திறந்திருந்தது. இதை அறியாத அந்த பெண் அந்த குழிக்குள் தவறி விழுந்தார். நல்லவேளையாக உடனடியாக அங்கிருந்தவர்கள் பார்த்து அந்த பெண்ணை தூக்கினர். சுயநினைவிழந்து மயக்கநிலையில் இருந்த அவரை தட்டி எழுப்பினர். அவர் எழுந்திரிக்காததால் அங்கிருந்து தூக்கிச் சென்று அருகில் உள்ள ஒரு தரைத்தளத்தில் படுக்க வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தெளிந்தவுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திறந்திருந்த பாதாள சாக்கடையால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து பாதாள சாக்கடைகளும் மூடப்பட்டுள்ளதா என சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. இதே போல அரசின் அலட்சியத்தால் சமீபத்தில் திறந்திருந்த பள்ளத்தில் விழுந்து 23 வயதான இளம் பத்திரிகையாளர் உயிரிழந்தார். எனவே இது போன்ற சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே பெரம்பூர் பகுதியில் முனியப்பன் சாலையில் ஆபத்தான முறையில் மின் இணைப்பு பெட்டி உள்ளதாகவும் பள்ளிகள் செயல்படும் இடத்திற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் மின்சார இணைப்பை சரி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர், மேடவாக்கம், டேங்க் சாலை, மில்லர் சாலை, புளியந்தோப்பு பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவிக நகர் கடந்த 2 நாட்களில் 346 மி.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூரில் 324 மி.மீ. மழை பெய்துள்ளது. புதிய டவுண் பகுதியில் 314 மி.மீ. மைழை பெய்துள்ளது.