ஒருவர் காதலில் விழுவதற்கு பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் இருக்கும். அப்படி அவர்கள் காதலில் விழுந்தபிறகு, தங்கள் இணையரை எப்பெடியெல்லாம் வர்ணித்து தங்களது காதலை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்பது, காதலில் விழுவதை விடவும் சுவாரஸ்யமான விஷயமாக மாறிவிடுகிறது. திரைப்படங்களும் கூட காதல் காட்சிகள் மூலம் எக்கச்சக்கமான வர்ணிப்புகளை நமக்கு காணக் கொடுத்துள்ளது. ஆனால், சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு பாகிஸ்தானில் காதலொன்று மலர்ந்துள்ளது.
பாகிஸ்தானிய பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! ஆம்… இப்படியான சம்பவமொன்று பாகிஸ்தானில் நடந்துள்ளது. பணக்கார வீட்டு பெண்ணான அவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லியாக இருந்திருக்கிறார் போல. பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண், அவர் மீது காதல் வயப்பட்டிருக்கிறார்.
அடுத்த வேலையாக அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே மணமுடித்திருக்கிறார். இது தொடர்பாக `டெய்லி பாகிஸ்தான்’ என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள். அப்போது, “அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அந்த சமயத்திலெல்லாம் அவரை கையை பிடித்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும்” என அப்பெண் காதல் பொங்க பேசியிருக்கிறார். இந்த காதல் தம்பதியின் பேட்டி தற்போது பாகிஸ்தானில் படு வைரலாகி வருகிறது.