’சூர்யகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என நினைக்கிறேன்’ என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார். எவ்வித அச்சமின்றி பந்துகளை நாலாபுறமும் விளாசுகிறார். இந்த பந்தையெல்லாம் அடிக்க முடியுமா? என்ற கேட்க தோன்றும் பந்துகளையெல்லாம் கீப்பருக்கு பின்னால் சிக்ஸராக விளாசுகிறார். அவருக்கு எப்படித்தான் வீசுவது என பந்து வீச்சாளர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம், சூர்யகுமார் வேற்று கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “சூர்யகுமார் யாதவ் மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நபராக இருக்கிறார். அவர் ஜிம்பாப்வே அணிக்கெதிராக மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் ரன்கள் குவித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் கூறுகையில், ”டி20-யில் சூர்யகுமாரை ஆட்டமிழக்க செய்ய வழி என்ன?. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு நீங்கள் திட்டம் தீட்ட முடியும். ஆனால், டி20-யில் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் சிரமப்படும்போது, ஒருவர் இந்த மாதிரியான ஃபார்மில் இருக்கும்போது பந்து வீசுவது கடினம். பாகிஸ்தான் குரூப் ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறேன். அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளால் தாக்கினார்கள். ஒருவேளை சூர்யகுமாரை அவுட்டாக்க இது ஒன்றுதான் வழியாக இருக்கலாம்” என்றார்.