தேனி மாவட்ட பகுதியில் போடி சில்லமரத்துப்பட்டியில் ஊராட்சியில் ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று 5ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் மூன்று பேர் பள்ளிக்கு வருகை தரவில்லை. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களில் இருவர் தாமதமாக பள்ளிக்கு வந்திருக்கின்றனர். அதற்கு காரணம் கேட்ட நிலையில், வழக்கம் போல பள்ளிக்கு வரும் வழியில் கம்பளி மற்றும் போர்வை உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வரும் வடமாநிலத்தவர் கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயன்றதாக தெரிவித்துள்ளனர் சிறுவர்கள்.
இதனையடுத்து, தாங்கள் இருவரும் தப்பியோடி வந்து விட்டோம். ஒரு சிறுவனை மட்டும் போர்வைக்குள் சுற்றி தள்ளுவண்டியில் வைத்து சென்றதாக கூறியுள்ளனர். இதனால் பெரும் ஆத்திரமடைந்த பெற்றோர் தேவாரம் சாலையில் சுமார் 4.கி.மீ தொலைவில் உள்ள சிலமலை என்ற கிராமத்தில் தள்ளுவண்டியில் சென்று கொண்டிருந்த வடமாநிலத்தவரை பிடித்து அடித்து விசாரித்துள்ளனர்.
மேலும், பலமுறையாக வடமாநிலத்தவர் குழந்தைகளை கடத்தியதாக கூறப்பட்ட நிலையில், பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதனிடையே காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவனும் சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்துள்ளான். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் என்பவர் வாடகைக்கு தள்ளுவண்டி எடுத்து பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இவர் கம்பளி, போர்வை உள்ளிட்ட பொருட்களை விற்பனை மட்டுமே செய்ததாகவும், குழந்தைகளை ஏதும் கடத்தவில்லை என அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் மற்றும் சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவர்களே, பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை மறைப்பதற்காக தங்களை வடமாநிலத்தவர் கடத்தியதாக பொய் புகார் கூறி நாடகமாடி வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.