தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா. கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பல பதக்கங்களையும், ஷீல்டுகளையும் வாரிக்குவித்துள்ளார். ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு காலடி எடுத்த வைத்து படித்துக் கொண்டிருந்த போதே விளையாட்டில் இருந்த அதீத ஆர்வம் அவரை அடுத்தடுத்து போட்டிகளுக்கு பயிற்சி பெற தூண்டியது. அப்படி பயிற்சி பெற்றபோதுதான் கால் தசையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. சிறு அறுவைசிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என கூறி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் வலி குறையவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்போதுமான் காலில் தசை செல்கள் அழுகிக் கொண்டே சென்றது தெரியவந்தது. எனவே உடனடியா காலை அகற்ற வேண்டும் என கூறினர். மகளின் உயிராவது கிடைக்கட்டுமே என சம்மதம் தெரிவித்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு மருத்துவர்கள் கால்களை அகற்றினர். இந்நிலையில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் இறுக்கமாக கட்டுபோட்டதாலேயே பிரச்சனை பெரிதாகி உள்ளது. உள்ளுக்குள்ளேயே செப்டிக்காகி அடுத்தடுத்து கிட்னியை பாதித்தது,பின்னர் இதயத்தையும் பாதித்து உயிரை பறிக்க செய்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகின்றது. மேலும், சம்மந்தப்பட்ட மருத்தவர்களுக்கு எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர காவல்துறை மருத்துவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.