ஒரு முன்னணி நடிகர்/நடிகை 100 திரைப்படங்களை தாண்டி நடிப்பது என்பது மிகப்பெரிய சாதனைக்குரிய விஷயம். அதே போல் அந்த நடிகர்களின் 100-வது திரைப்படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படும். அதனால், ஒவ்வொரு முன்னணி நடிகர்களும் தங்களது 100-வது திரைப்படத்தின் கதையை மிகவும் கவனத்தோடு தேர்ந்தெடுப்பார்கள். என்னதான் கதையில் கவனம் செலுத்தினாலும் சில நேரங்களில் காலை வாருவதும் உண்டு. அவ்வாறு தங்களது 100-வது திரைப்படத்தில் ஃப்ளாப் கொடுத்த டாப் நடிகர்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜெமினி கணேசன்
தமிழின் பழம்பெரும் நடிகராகவும், காதல் மன்னனாகவும் திகழ்ந்தவர் ஜெமினி கணேசன். இவர் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடித்த 100 ஆவது திரைப்படம் “சீதா”. இத்திரைப்படம் 1967ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில், அவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருந்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கிய இத்திரைப்படம் பொருளாதார ரீதியாக தோல்வி அடைந்தது.
சாவித்திரி
மக்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்த நடிகையான சாவித்திரி கிட்டத்தட்ட 250 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் நடித்த 100 ஆவது திரைப்படமாக “கொஞ்சும் சலங்கை” என்ற திரைப்படம் அமைந்தது. இத்திரைப்படம் 1962ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
சரோஜா தேவி
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாகவும் கன்னடத்து பைங்கிளியாகவும் திகழ்ந்தவர் சரோஜா தேவி. இவர் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 100 ஆவது திரைப்படம் “பெண் என்றால் பெண்”. இத்திரைப்படம் 1967ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், இது வெற்றித்திரைப்படமாக அமையவில்லை.
ஜெய்ஷங்கர்
தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக திகழ்ந்த ஜெய்ஷங்கர், தமிழில் எண்ணிலடங்கா திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 100 ஆவது திரைப்படம் “இதயம் பார்க்கிறது”. இத்திரைப்படம் 1974இல் வெளியானது. ஜெகன்னாதன் என்பவர் இயக்கிய இத்திரைப்படம் பொருளாதார ரீதியாக கைக்கொடுக்கவில்லை.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 100 ஆவது திரைப்படம் “ராஜ பார்வை”. இத்திரைப்படம் 1981ஆம் ஆண்டு வெளியானது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்தது.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 100 ஆவது திரைப்படம் “ஸ்ரீ ராகவேந்திரர்”. இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. மேலும், இத்திரைப்படம் ரஜினிகாந்த்தின் கனவு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.