தற்போதைய சினிமாவிற்கு நடிப்பு முக்கியமில்லை என்றாலும் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் தப்பித்துவிடலாம். இதைத் தவிர சம்பாதிப்பதற்கு மட்டுமே சினிமாவை தேர்வு செய்கின்றனர். ஆனால், முந்தைய காலத்தில் நடிப்பு, திறமை, அதிர்ஷ்டம் என்று அனைத்தையும் கொண்ட ஒரே நடிகராக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்தவர் தான் அந்த நடிகர். சிம்மகுரலோன் என தமிழ் சினிமாவில் மக்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட நடிகர் தான் அவர். நாடக கலைஞராக உருவாகி பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து ஒரு ஆண்டில் குறைந்தது, இவரது நடிப்பில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகும். அந்த அளவிற்கு சினிமாவின் மேல் ஈடுபாடு கொண்டவர் தான் சிவாஜி கணேசன்.
இவர் நடித்த பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை நம்மால் எளிதாக மறக்க முடியாது. இவர் நடித்த 288 திரைப்படங்களும் மக்களால் மறக்க முடியாத திரைப்படங்களாக உள்ளது. தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைகள் வந்தாலும் சிவாஜி கணேசன் நடிப்பில் ஒன்று அல்லது இரண்டு படங்களாவது வெளியாகி சூப்பர் ஹிட் கொடுக்கும். அப்படி சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த 288 திரைப்படங்களில் 250 திரைப்படங்கள் ஹீரோவாக நடித்த திரைப்படங்களாகும். தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் வருடத்தில் 1 திரைப்படங்கள் கொடுத்து வருவதையே பெருமையாக பேசும் நாம், 250 படங்களில் ஹீரோவாக நடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதில் 9 மலையாள படங்களும், இரண்டு தெலுங்கு படங்கள், இரண்டு ஹிந்தி படங்கள் என நடித்து அசத்தியவர்.
மேலும் மர்ம வீரன், தாயே உனக்காக, நட்சத்திரம் உள்ளிட்ட 17 திரைப்படங்களில் கௌரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். மேலும் தனது வயது மூப்பு காலத்தில் நடிகர் விஜயின் ஒன்ஸ் மோர், கமல்ஹாசனின் தேவர் மகன், பிரபுவின் பசும்பொன், முரளியின் என் ஆசை ராசாவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படிக்காதவன், படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்தார். இவ்வளவு திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஒருநாள் கூட படப்பிடிப்பிற்கு லேட்டாக வந்தது இல்லையாம். சரியான நேரத்தில் வேலையை பார்ப்பது, நடிப்பது, பார்க்கும் அனைவரிடமும் மரியாதை கொடுப்பது என இன்று வரை உள்ள நடிகர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உண்டு. அன்றைய காலத்தில் இவருக்கு போட்டியாக இருந்த இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களே சிவாஜி கணேசனின் நடிப்பை கண்டு வியந்தாராம்.
சிவாஜியின் திரைப்படம் ரிலீசாகுது என்றால், அன்றைய காலத்தில் நடித்த ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்டோரின் திரைப்படங்களை அவர் படத்துடன் ரிலீஸ் செய்ய யோசிப்பார்களாம். இதன் காரணமாக தனிக்காட்டு ராஜாவாக வசூல் மன்னனாக வலம் வந்தார் சிவாஜி கணேசன். இவ்வளவு பெருமைக்குரியவர் இன்று நம்முடன் இல்லையென்றாலும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் சிவாஜியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்பதே நிதர்சனம் உண்மை.