2002ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ‘பாபா’. ரஜினிகாந்த கதை திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மனிஷா கொய்லராலா, விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ்,நம்பியார், ரம்ய கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தாலும், படத்தில் ரஜினிகாந்தின் பாபா முத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாபா படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இந்த படத்தை மீண்டும் டிஜிட்டல் முறையில் புதுப்பொலிவுடன் வெளியிட உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பாபா படம் புதுப்பொலிவுடன் விவரிவிருப்பன் புதிய காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு வரும் இந்த படத்தின் புதிய காட்சிகளுக்கு மீண்டும் டப்பிங் செய்ய வேண்டி இருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். அவர் டப்பிங் பேசுவது மற்றும் பாபா படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர், படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
பாபா படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘காந்தாரா’ படத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்தே ‘பாபா’ படத்தை மறுவெளியீடு செய்யும் எண்ணத்தை ரஜினிகாந்த் பெற்றதாக கூறியுள்ளார்.