திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மசூதி தெருவில் வசித்து வருபவர் பூங்குன்றன். இவர் கூலித் தொழிலாளியாக செய்து வருகிறார். இவரது மூத்த மகள் தீபா (19). இவர் 12ஆம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வந்துள்ளார். ப்ளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கல்லூரியில் அவர் கேட்ட பாடப்பிரிவு கிடைக்கவில்லை. இதனால், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ (தமிழ் இலக்கியம் ) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரியில் தமிழ் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த மாணவி தீபா, ஒரு கட்டத்தில் கல்லூரி படிப்பை நிறுத்தி விடுவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி கல்லூரிக்கு போக பிடிக்காமல் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் தீபாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி தீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில வழிக்கல்வி படித்த மாணவி கல்லூரியில் தமிழில் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.