12-ம் வகுப்பு தேர்வில் 60% பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,800 சிறந்த மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்கப்படும் என அசாம் அரசு ஏற்கனவே அறிவித்தது. 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 29,748 மாணவிகளுக்கு, 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்ற 6,052 ஆண்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
கவுகாத்தியில் உள்ள ஜனதா பவனில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை முடிவுகளை அறிவித்த அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, “இன்று முதல் ஸ்கூட்டர் விநியோக விழா நிகழ்ச்சி நடைபெறும் மற்றும் தொடக்க நிகழ்ச்சி கமரூப் மாவட்டத்தில் நடைபெறும் என தெரிவித்தார்.
முன்மொழிவின் ஒரு பகுதியாக மாவட்ட நோடல் அதிகாரிகள் மூலம் பயனாளிகளுக்கு பதிவு மற்றும் காப்பீடு செய்வதற்கான நிதி உதவியை உயர்கல்வித் துறை வழங்கும். இந்த நடவடிக்கைக்கு மொத்தமாக ரூ.258.9 கோடி செலவாகும் என அரசு தெரிவித்துள்ளது.