மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் தந்தை மற்றும் மாமா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் வசித்து வந்த 16, 20 வயது மதிக்கத்தக்க இரண்டு சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தை மற்றும் மாமாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை, எஸ்பி பிரபாத் குமார் கூறுகையில், ”இரண்டு சகோதரிகளின் தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்களால் தங்களது தாயை கவனிக்க முடியவில்லை. அதனால் அடிக்கடி இருவரும் தங்களுடைய அத்தை வீட்டிற்கு சென்று வந்தனர். அப்போது அவர்களின் மாமா, இரு சகோதரிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இரண்டு சகோதரிகளையும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்.

இதுகுறித்து சகோதரிகள் தனது தந்தையிடம் சொன்ன போது அவரும் இருவரையும் மிரட்டி இருக்கிறார். பிறகு தனது மூத்த மகளிடம் தவறாக நடந்துள்ளார். நாளடைவில் இரு மகள்களையும் பலாத்காரம் செய்ய தொடங்கினார். தந்தை மற்றும் மாமாவின் இந்த கொடுமையை தாங்க முடியாத இரு சகோதரிகளும், வீட்டை விட்டு வெளியேறி, ராய்ப்பூரில் இருக்கும் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்தனர். இதற்கிடையே, தனது மகள்களை காணவில்லை என அந்த பெண்களின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து வழக்குபதிவு செய்து இருவரையும் தேடிவந்தோம். இந்நிலையில், அவர்கள் இருவரும் ராய்பூரில் உள்ள ஆபரேஷன் முஸ்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த சகோதரிகள் அளித்த புகாரின் பேரில் தந்தை மற்றும் மாமா, மீது ஐபிசி 376, 354 மற்றும் பிற பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.