பார்ட் டைம் வேலையில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு 6 நாளில் ரூ.32 லட்சத்தை இழந்ததாக வாலிபர் ஒருவர், கோவை சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆன்லைன் இன்வஸ்மெண்ட், ஆன்லைன் வேலை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பறிகொடுக்கின்றனர். அந்த வகையில், டெலிகிராமில் வந்த லிங்கை தொடர்ந்த ஒருவர், பார்ட் டைம் ஜாப் (Part Time Job) செய்ய முற்பட்டு ஆறே நாளில் 32 லட்ச ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
கோவை மாவட்டம் சிட்கோ பகுதியை சேர்ந்த வாலிபர் ரவி சங்கர். இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பார்ட் டைம் பணிக்காக முயற்சி செய்தபோது சுற்றுலா தளங்களுக்கு ரேட்டிங்க் தரும் பணி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பெயரில் அந்த சைட் இருந்துள்ளது. அப்போது அந்த நிறுவனத்தை ரவிசங்கர் டெலகிராமில் அணுகியிருக்கிறார். எதிர் தரப்பிலிருந்து தாங்கள் பெங்களூரில் இருந்து பேசுவதாகவும், இது கிளை அலுவலகம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். இந்த பணிக்கு முன்பணம் கட்டி ரேட்டிங் பணியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
அதாவது சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அந்த பகுதியை பற்றி ஸ்டார் ரேட்டிங் தருவதை போல வீட்டிலிருந்து ரேட்டிங் தந்து பணம் சம்பாதிக்கலாம் என்பதே இதன் சாரம். இதனை நம்பிய ஐடி வாலிபர், நவம்பர் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 6 நாட்களுக்குள் தொடர்ந்து முன் பணம் கட்டி டூரிஸ்டு சைட்டின் பக்கங்களை பெற்று பணியில் ஈடுபட்டிருக்கின்றார். அதாவது ஒரு சைட்டுக்கு 10 ஆயிரம் கட்டுவதாக வைத்துக்கொண்டால் பணியை முடித்தவுடன் 11 ஆயிரம் தருவார்கள். இதில் 1000 ரூபாய் லாபம். இப்படி ஆறு நாட்களில் மட்டும் ஏராளமான சைட்டுகளில் சுற்றுலா தளங்களுக்கு ரேட்டிங் தர ரூ.32,23,909 பணத்தை ஆன்லைனில் செலுத்தியிருக்கின்றார். ஆனால், ஒரு பைசா கூட திரும்ப வரவில்லை. டெலகிராமில் நடந்த உரையாடலும் அழிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தான் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மாநகர சைபர் கிரைம் துறையில் அந்த ஐடி வாலிபர் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முதல்கட்டமாக ஆன்லைன் ஸ்கேமர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.